ஜோகன் ஸ்பாரின் தி ராபிஸ் கேட்

ஜோகன் ஸ்பாரின் சித்திரநாவல்களில் மிக முக்கியமானது The Rabbi's Cat. . நான் இதுவரை வாசித்த சித்திரக்கதைகளில் இதை போல எள்ளலும் உயர் தத்துவ கருத்துக்களும் கவித்துவமும் நிரம்பிய நாவல் எதையும் வாசித்தது இல்லை. மிக அற்புதமான புத்தகம். ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போது பீறிடும் சிரிப்பை அடக்க முடியாமல் தான் கடந்து போக வேண்டியதிருக்கும்

ஜோகன் ஸ்பாரின் சித்திரக்கதை ஒரு பூனையைப் பற்றியது. 1930 களில் அல்ஜீரியாவில் வாழும் யூத மதகுருவின் குடும்பத்தில் வசிக்கும் பூனையது. அந்த மதகுருவிற்கு ஜிலாபியா என்ற அழகான மகள் இருக்கிறாள்.

மனைவியை இழந்த மதகுரு மிகுந்த ஆசாரமானவர். மதநூல்களை படிப்பதிலும் புதிதாக விளக்கம் தருவதிலும் ஈடுபாடு கொண்டவர். யூத மரபை எந்த நிலையிலும் கைவிடாதவர்.


அவரது வீட்டில் இருந்த பூனை மதகுருவோடு சேர்ந்து பழகி தானும் ஒரு கடவுளுக்கு பயந்த விலங்காக நடந்து கொள்கிறது. தன்னால் பேச முடியாது என்ற போதும் தன்னால் கேட்க முடியும். உலகில் பல மதங்களை சேர்ந்தவர்கள் இப்படி தானே வாழ்கிறார்கள் என்று சொல்லும் பூனை புனிதக் கருத்துகளை எப்போதுமே காதை திறந்து வைத்து கேட்டு கொண்டிருப்பதே மேலானது. வாய் பேசத் துவங்கினால் தலை போய்விடும் என்று சொல்கிறது. அந்தப் பூனையை மதகுருவின் மகள் மிகவும் நேசிக்கிறாள். அவளுடன் பூனை நெருக்கமாக பழகுகிறது. அவள் தனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று பூனை கற்பனை செய்து கொள்கிறது.


அந்த மதகுருவின் வீட்டில் ஒரு பேசும்கிளி இருக்கிறது. அதை ஒரு நாள் பூனை அடித்து சாப்பிட்டுவிடுகிறது. அன்றிலிருந்து பூனைக்கு பேசும் சக்தி வந்துவிடுகிறது. ஆச்சரியம் அடைந்த மதகுரு தன்மகளிடம் நமது பூனை பேசுகிறது என்று வியப்போடு சொல்கிறார்.


மகள் உற்சாகமாகி என்ன பேசுகிறது என்று கேட்கிறாள் வருத்தத்துடன் மதகுரு அது வாயை திறந்தால் ஒரே பொய்யாகக் கொட்டுகிறது என்கிறார். உடனே பூனை அது பொய் என்று மறுத்து சொல்கிறது. மகளோ பொய் சொல்லத் தெரிவது எளிதானதில்லை என்று பூனையை கட்டிக் கொள்கிறாள். கொஞ்சுகிறாள். பெண்களுக்கு பொய்யின் மகத்துவம் புரியும் என்கிறது பூனை.


மதகுருவிடம் பூனை தான் ஒன்றும் கிளியை கொல்லவில்லை என்று அடுத்த பொய்யை சொல்கிறது. அவர் இப்படி துஷ்ட சிந்தனை கொண்ட பூனையை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதை தனது தலையான செயலாக முடிவு செய்கிறார்.


தன் மகளோடு பூனை சேர்ந்திருக்க அனுமதித்தால் அது அவளைக் கெடுத்துவிடும் என்று நம்பி மகளை விட்டு பிரிக்கிறார். தன்னோடு கூட வைத்து கொண்டு மத நூல்களைக் கற்றுத் தருகிறார். இந்த பகுதி தான் நாவலின் உச்சபட்ச வேடிக்கையானது.


பூனைக்கு அவர் யூதமரபை போதிக்க துவங்கும் போது பூனை அலுப்போடு சொல்கிறது. பூனைகளால் ஒரு போதும் யூதராக முடியாது. நான் வெறும்பூனையாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.


அதற்கு மதகுரு ஒரு யூதனின் வீட்டில் வளர்க்கபடும் பூனை யூதபூனையாகவே கருதப்படும் என்று சொல்லி நீதிநூலை கற்பிக்கிறார். உடனே பூனை ஆத்திரப்பட்டு கேட்கிறது.


அப்படியானல் மத சம்பிரதாயப்படி பூனைக்கும் ஆண் உறுப்பின் தோல் நீக்கும் சடங்கை செய்வீர்களா என்று கேட்கிறது. அவர் பூனைகளும் அதில் விலக்கு அளிக்கபடுகிறது என்று சொல்கிறார்.


பூனை யூத சம்பிரதாயங்களுக்கு நான் எதிரானவன் என்று முரண்டுபிடிக்கிறது. மதகுரு அதை விடுவதில்லை. இதற்கிடையில் பூனை ஜிலாபியாவை அடிக்கடி சந்தித்து அது வரை யூதமத நூலில் எதை எல்லாம் பெண்கள் அறிந்து கொள்ள கூடாது என்று விலக்கபட்டிருக்கிறதோ அதை எல்லாவற்றையும் பற்றி பேசுகிறது. அவளிடம் கேள்வி கேட்கிறது. முக்கியமான யூத நூல் விலக்கி வைத்திருந்த காதல் காமம் பற்றி அவளுடன் தொடர்ந்து பேசுகிறது. அவள் மனமாற்றம் கொள்ளக் ஆரம்பிக்கிறார்


மதகுரு தன் பூனையை தன்னால் முறைப்படுத்த முடியவில்லையே என்று மூத்த மதகுருவை அணுகுகிறார். அவரோ பூனைகள் மனிதர்களுடன் சேர்ந்தே வசித்தாலும் மனிதர்களை போல எதையும் எளிதாக நம்பிவிடுவதில்லை என்கிறார்


பூனை பலமொழிகளிலும் பேசுகிறது. கபாலா என்ற ரகசிய மார்க்கம் பற்றி ஆழமாக விவாதிக்கிறது. மதநூல்களை புரிந்து கொள்ளும் போது கேள்விகேட்க வேண்டும் என்று சண்டை போடுகிறது. இப்படியான சிந்திக்க தெரிந்த அந்த பூனையும் மதகுருவும் நாவல் முழுவதும் வாழ்க்கை குறித்த ஆதாரமான கேள்விகளை பகிர்ந்து கொள்கிறார்


ஒரு நாள் மதகுருவின் மகள் தான் ஒருவரை காதலிப்பதாக சொல்லி அறிமுகப்படுத்துகிறார். மதகுரு பூனை இருவருமே இதனால் சோகமடைகிறார்கள். வருத்தம் இருவரையும் ஒன்று சேர்கிறது. மகள் அந்த ஆளையே மணந்து பாரீஸ் நகரம் செல்கிறாள். தன் மகள் திருமணமாகி செல்லும் வீட்டிற்கு பூனையும் மதகுருவும் செல்கிறார்கள். அங்கே காணப்படும் பகட்டான பாவனைகளையும் அந்த வீட்டு மனிதர்கள் பூனையை விடவும் அதிகமாக பொய் சொல்வதையும் கண்டு கொள்கிறார்கள்.


இப்போது பூனையும் மதகுருவும் ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். ஒருவர் மற்றவரை தனது மறைமுக ஆசான் போல கொள்கிறார்கள். இவர்களது தனிமையும் பயணமும் அக உலகமும் தான் இந்த கிராபிக் நாவல். இதன் தொடர்ச்சி இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது.


இதை வாசிக்கும் போது அடிக்கடி வைக்கம் முகமது பஷீரின் கதையான மாயப்பூனை நினைவிற்கு வந்தது. வேறுவேறு தேசங்களில் வேறு காலங்களில் வாழ்ந்த போதும் இருவரது மனதும் கொள்ளும் கற்பனையும் நெருக்கமாக இருப்பதாகவே தோன்றியது


பொய் சொல்ல தெரிந்த இந்த பூனை தன்னை அறிய துவங்குவதோடு உலகின் முரண்களையும், அபத்தங்களையும் கேள்விகேட்கிறது. விமர்சனம் செய்கிறது. பூனை தனது அடிப்படை உரிமையாக Freedom to lie என்று குறிப்பிடுகிறது.


இந்த பொய்கள் உலகிற்கு மிக தேவையானவை. இந்த புத்தகம் தந்த உற்சாகம் ஜோகன் ஸ்பாரின் மற்ற புத்தகங்களையும் தேடி வாசிக்க வேண்டும் என்று மனது அலைபாய்கிறது.

Comments