இரா. சின்னசாமி கவிதைகள்

கரைந்துகொண்டிருப்பதை எண்ணி
கண்ணீர் வடிக்கிறது
அந்த நிலவு
பாறையைச் சிதைப்பதில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன
சில வேர்கள்
அந்தப் பெரும் நதி
தன் தடத்தை
மாற்ற விரும்பிக்கொண்டிருக்கிறது
மீந்த கூழாங்கற்கள்
புதிய தடத்தைச் செப்பனிடுகின்றன
சரிந்து விழுகிறது
அந்த மரம்
உணர்வற்று
தூக்கிப் பிடிக்கும்
கரங்களில்
நகக் கீரல்களில் வழிகின்றது
உதிர அருவி
பின்னலிட்ட சிலந்தி நூலில்
பூக்கத் தொடங்குகிறது
ஒரு மாய ஆடை
சிதைந்த கனவுகளில்
உறைவிடங்களைத் தேடுகின்றன
சில உயிர்கள்
ஏந்திக்கொண்டிருக்கிறான்
அந்தப் பிச்சைக்காரன்
நம் பாத்திரத்தை

o

இலைகள் உதிர்ந்து
பூக்கள் மீந்த கிளைகளில்
கசிகின்றன உதிரத்துளிகள்.
கருப்பராயனுக்காய்க் கழுத்து அறுபடும்
ஆட்டின் குரல் ஒலியில்
வழிகின்றது மரபின் துரோகம்.
மெழுகுதிரி வெளிச்சத்தின்
உரசல்களில்
கருகுகின்றன
சுவருள் பதுங்கிய கருங்கற்கள்.
தூண்டில் புழுவின்
முனகலில் சிதிலமடைகின்றது
பெருங்கடலின் பேரிரைச்சல்.
மதகுகளை உடைத்து திரளும்
சங்கீதத்தில்
மூழ்கி எழுகின்றன சோளக்கதிர்கள்.
கழுத்து மணிகளை குலுக்கியபடி
சந்தையை நோக்கி
நகர்ந்துகொண்டிருக்கின்றன
உயிர்கள்.

o

சவத்தைக் குத்திக் கீறிக்கொண்டிருக்கிறாய்
அதைப் புணர முடியாமல் போனது குறித்து
வருத்தம்தான்.
வாழையிலையால் முதுகை மறைத்துக்கொண்டு
நுங்கில் புதைந்த உறுப்பை உருவ முடியாமை குறித்து
வெட்கப்படவில்லை.
பனி அம்புகள் குத்தி நிற்கின்றன
எரிமலைச் சரிவில்
குடைக்காளான்களின் தண்டுகளில்
சொக்கிக் கிடக்கின்றது ஆன்மா.
குட்டிச் சுவர்களை நோக்கி
நகர்ந்துகொண்டிருக்கின்றது
வியர்வை ஓடை.
சேற்று வயலில் குமிழியிடுகின்றன
மிதித்துப் புதைக்கப்பட்ட
எருவஞ் செடிகளின் மூச்சுக் காற்று

Comments