'ஒரு மனிதனின் கதை' சிவசங்கரி

நேற்று காலை வானொலி ஒன்றில் சிவசங்கரி அவர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்,
எழுத்தாளர் சிவசங்கரியை நினைத்தவுடனே பலரது நினைவுக்கு வருவது அவரது 'ஒரு மனிதனின் கதை' நாவல் தான். கதையின் நாயகன் தியாகுவும், நாயகி கங்காவும் மறக்கமுடியாத பாத்திரப்படைப்புகள். குடிப்பழக்கம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு சீர்குலைக்கும் என்பதை அத்தியாயத்திற்கு அத்தியாயம் மனத்தில் தைக்கிறமாதிரி அழகாகச் சொல்லியிருப்பார் சிவசங்கரி. 'ஒரு மனிதனின் கதை'யைப் படித்து விட்டுப்போதைப் பழக்கத்திலிருந்து விலகியோடிப் போனவர்கள் நிறையப் பேர். இதுதான் சிவசங்கரியின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.

இந்தக்கதை பிரசுரமான 'ஆனந்தவிகடன்' கூட இந்தக் கதை வெளிவந்த நேரத்து, தனது பத்திரிக்கைக்கான கொள்கை முடிவொன்றை எடுத்தது; இனி மது, சிகரெட் விளம்பரங்களை ஏற்பதில்லையென்று. 'ஒரு மனிதனின் கதை' பிரசுரமாகி ஆண்டுகள் பலவாகியும் 'ஆனந்தவிக்டன்' பத்திரிகை பல வருடங்களுக்கு முன்பு தான் எடுத்த முடிவில் வழுவாமல் இன்றும் அந்தக் கொள்கையைக் கடைபிடித்து வருகிறது என்பது பத்திரிகை உலகில் அரிதாகப் பார்க்கக்கூடிய ஒரு விஷயம். இதில் ஒரு சுவையான செய்தி என்னவென்றால், "ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்" சங்கத்தின் விளம்பரம்
ஒன்றை 'இந்து' பத்திரிகையில் படித்ததின் பின்னால் தான், 'ஒரு மனிதனின் கதை' உள்ளத்தில் உருவானதாக சிவசங்கரி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

கருணைக்கொலை, மலையின் அடுத்த பக்கம், இனி, மூன்று தலைமுறை நிகழ்ச்சிகளைச் சொல்லும் 'பாலங்கள்', நான்நானாக, தவம், நப்பாசை,அவள், அப்பா என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய புதினங்களைப் படைத்துள்ளார் சிவசங்கரி. அடுக்களைகளிலும், குடும்ப உறவுகளிலும் புதைந்து போன பெண்களின் மெலிதான உணர்வுகளை மீட்டெடுத்து, தனது புதினங்களில் ஆவேசமாகச் சொன்ன சிலருள், பெருமைக்குரியவர் சிவசங்கரி இவரது படைப்பான 'ஒரு சிங்கம் முயலாகிறது'--'அவன் -அவள்-அது' என்ற திரைப்படமானது. பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த '47 நாட்கள்' திரைப்படம், சிவசங்கரியின் மறக்கமுடியாத கதை தான். சமூகத்தின் சில கோணலான நடவடிக்கைகளால், நேரடியாகத் தாக்குறும் பெண்குலத்தின் வேதனையை மிக அழகாக படம் பிடித்துக்காட்டும் வேகம சிவசங்கரியின் எழுத்துக்களில் உண்டு.

'திரிவேணி சங்கமம்' அனுராதாவும், 'ஒரு சிங்கம் முயலாகிறது' லாவண்யாவும், 'நெருஞ்சிமுள்' பூமாவும், 'கருணைக்கொலை' ஜனனியும், 'மெள்ள மெள்ள'அகிலாவும், 'கப்பல் பறவை' சுஜாவும் அந்தந்த நாவலை நினைக்கையிலேயே தங்கள் தங்கள் தனித்தன்மையுடன் நினைவில் நிற்கிறார்கள்.

முப்பதுக்கு மேற்பட்ட நாவல்களையும், ஏகப்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ள சிவசங்கரி, இலக்கிய ஆர்வலர்கள் பாரதி-லட்சுமணன் அமைப்பான 'இலக்கிய சிந்தனை' பரிசு பெற்றவர். அவிஸ்திகா (Awsthitha) என்னும் கலைக்கான விருது பெற்றவர். 'ஒரு மனிதனின் கதை' தொலைக்காட்சித் தொடராகவும் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.

'இளமையில் எழுத வேண்டும் என்கிற எண்ணமோ, தான் ஒரு எழுத்தாளராக ஆவோம் என்கிற கற்பனையோ மனதில் கிஞ்சித்தும் எனக்கு இருந்ததில்லை'என்று சிவசங்கரி சொன்னதாக எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.

படைப்பிலக்கியத்தில் எந்தப் பயிற்சியும் பெறாத இவர் எழுதிக் குவித்தவைதான் ஐம்பதுக்கும் மேற்பட்டப் புதினங்கள்; அத்தனையும் வார, மாத இதழ்களின் பகாசுரப்பசிக்குத் தீனிபோடுபவையாக இருந்தாலும் இவர் உள்ளத்தில் பதிந்த சில பரிதாப உணர்வுகளும், ஜீவகாருண்ய சிந்தனையும், போதைவஸ்துகள் மனிதகுலத்தை சீரழித்து வேட்டையாடும் அவலமும், அதிலிருந்து அதை மீட்க வேண்டிய அவசியமும், பெண்ணினம் ஏமாளிகளாகப் பட்டிருக்கும் சூதை உரத்தகுரலில் பிரகடனம் பண்ணும் வேகமும் இவர் எழுத்துக்களில் இயல்பாகப் படிந்துள்ள பாங்கை மறுக்கமுடியாது.

இந்த உணர்வுகள் தாம் இவரது பிற்கால எழுத்துக்களைத் தீர்மானித்திருக்கின்றன. இந்த இடத்தில் தான், கதைகளைத் தவிர்த்து கருத்துப் பிரசாரத்தைப் பலமாகச் செய்தலும், சமுதாய விழிப்புணர்வைத் தூண்டிவிடும் கட்டுரைகளை எழுதுதலும், ஊனமுற்றோர், முதியோர், மனவளர்ச்சி குன்றியோர் ஆகியோரை ஊக்குவிக்கும் செயலையும் இவரிடம் பார்க்க முடிகிறது. வெறும் கதைகளை மட்டும் எழுதுவதோடு என் வேலை முடிந்தது என்று கடையைக் கட்டாமல்,மிகுந்த பொறுப்புணர்வுடன் நேரடியாகக்களத்தில் இவர் இறங்கியதையும் பாராட்டத்தான் வேண்டும். பாரதப் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி,அன்னை தெரஸா அகியோரைப் பேட்டி கண்டு இவர் எழுதிய தொடர்கட்டுரைகள் அடிக்கோடிட்டுச் சொல்லவேண்டிய அளவிற்கு அற்புதமானவை.

எம்.ஏ.சி. அறக்கட்டளை நிறுவனப் பரிசைப்பெற்ற இவரது 'சின்ன நூற்கண்டா நம்மை சிறைப்படுத்துவது?' தற்சாற்பு கட்டுரைத் தொடரையும், "அக்னி" (Awakened Groups for National Integration) அமைப்பை இவர் நிறுவியதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனையை வளப்படுத்தும் செயலாய், அந்த முயற்சிக்கு முன்னோடியாய் பல்வேறு இந்திய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, ஆகச்சிறந்த இலக்கிய படைப்பாளிகளைச் சந்தித்து, அவர்களது சமூக, இலக்கிய கருத்துக்களைப் பதிவுசெய்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற அற்புதமான நூலை பல்வேறு நடைமுறை சிரமங்களுக்கிடையே எழுதி ஆவணமாக்கிய சிவசங்கரியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Comments