அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

ஆறும் நீரும் உனக்குச் சொந்தமென்றால்
வானும் மேகமும் யாருக்குச் சொந்தம்?

வயலும் விளைச்சலும் உனக்குச் சொந்தமென்றால்
வான் மழையும் பருவமும் யாருக்குச் சொந்தம்?

நிலமும் நாடும் உனக்குச் சொந்தமென்றால்
இப்புவியும் வளியும் யாருக்குச் சொந்தம்?

விழிப்பும் உறக்கமும் உன்னுடையதென்றால்
இரவும் பகலும் யாருக்குச் சொந்தம்?

வாழ்வும் பயனும் உன்னுடையதென்றால்
உன் பிறப்பும் இறப்பும் யாருக்குச் சொந்தம்?

ரத்தமும் சதையும் மூச்சும் நீயென்றால்
உன் உயிரும் ஆத்மனும் யாரென்று கூறு.

என்னுடையது என்னுடையது என்கின்றாயே
நீ இல்லையென்றாலும் அனைத்தும் இருக்குமடா

இருப்பதெல்லாம் உன்னால் வந்ததுமல்ல நீ
இல்லாமல் போனால் மறையப்போவதுமல்ல

ஏனென்று தெரியாமல் வாழப் பிறந்துள்ள நீ
எனக்கென்று இவ்வாழ்கை எதற்கென்று பொருள்தேடு

சுகபோகியாய் அனுபவிக்கும் உனக்கென்று உள்ளதெது?
கட்டையில் எரித்தாலும், குழி தோண்டிப் புதைத்தாலும்
அடுத்த ஆறு மாதத்தில் அடையாளம் அற்றுப்போகும் நீ
உன்னுடையதென்று ஒன்றுமில்லை என்றுணர்

இருக்குமனைத்தும் அனைவருக்குமேயெனும்
உண்மையறிந்து ஒன்றாய் வாழ்ந்திட
இறைவன் பங்கிட்டு அளித்ததேயெல்லாம்
அதிலென்ன உன் பங்கு என் பங்கு?

காவிரி கங்கை சிந்து நதிகளெல்லாம்
நம் பிறவியைக் கொடுத்த இறைவனுடையது
பு‌னிதம் அதுவென்று போற்றிப் பகிர்ந்துகொள்

அடித்துக் கொண்டு வாழலாம் மிருகங்கள்
அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

Comments