இரா. சின்னசாமி கவிதைகள்

இரா. சின்னசாமி கவிதைகள்

எனது வனத்தில்
தென்றல் வீசியதாக வரலாறில்லை
கருமணல் வெளியில்
நீட்டி வைத்த காலடிகளில்
நசநசக்கும் யானை விட்டை
சொல்லிக் கொள்ளலாம்
ஆலிலைகளை அழித்தபடி
பாறைகளின் இடுக்கில் வழிந்தோடும்
நீர் வழி
என் முதுகில் தான் பயணிப்பதாக.
அட்டைகள் புடைக்க
வைத்துக்கொண்டிருக்கும் என் குருதி
வேம்பும் வில்வமும் பிணைந்துகொண்டதில்
புளகாங்கிதமுற்று
அடியில் அமர்ந்து
அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் சாமி.
மெத்தென்ற சப்பாத்தி கள்ளி
பிடித்துத்தான் போய்விட்டது.
குடியேறிய கருநாகங்களுக்குக்
கோயில் கட்டி வைத்தாயிற்று
ஆலிவ் இலைகளை எனது தலையில்
சூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
காலாணிச் செருப்பின் மீது
எனது பயணம்.
l

பாறைகளைக் கரைக்கும் முயற்சியில்
காற்று
சிலந்திக் கூடுகள் கதியிழந்து கொண்டிருக்கின்றன
அந்த வனாந்தரத்தில்
சுகித்துக் கிடக்கும் மலர்களுக்கு
வெட்கமில்லை
புதுப்பித்துக்கொள்வதற்காய்
பொழிகின்ற மேகங்களை
பூஜித்துக்கொண்டிருக்கும் மலைமுகடு
குனிந்து கோலமிடுகையில்
புணரத் துடித்து
தோற்ற குறியை
நசுக்கிக்கொண்டிருக்கின்றன
எனது புள்ளிகள்
எனது அறையில்
பூட்டி வைப்பதற்கு
எதுவுமில்லை

Comments