ஏதோ ஒன்று கற்றுக் கொள்ள இருக்கிறது.

ஒரு பௌர்ணமி இரவில் ஒரு அழகான குளம் நிலவொளியில் மின்னிக் கொண்டு இருக்கிறது. சில்லென லேசான காற்று அடிக்க,தொலைவில் இருந்து ஒரு புல்லாங்குழல் இசை இனிமையாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.அந்த ரம்மியமான சூழ்நிலையை ஒருவன் குளத்தின் கரையில் இருந்து ரசித்துக் கொண்டு இருக்கிறான். அந்த நேரம் பார்த்து ஒரு அழகான வெண்ணிறப் பறவை ஆகாயத்தில் பறந்து செல்ல அதன் பிரதிபிம்பம் குளத்தின் நீரில் விழ அந்த கணம் பூரண அழகு நிறைந்த ஒரு கச்சிதமான கணமாக அமைந்து விட்டது. குளக்கரையில் இருந்தவன் மெய்மறந்து அந்தக் கணத்துடன் ஐக்கியமாகி விட்டான்.
அதற்குப் பிறகு தினமும் இரவு அவன் அந்தக் குளக்கரைக்குப் போக ஆரம்பித்தான்.பல நாட்களில் புல்லாங்குழல் இசை கேட்கவில்லை. சில நாட்களில் நிலவொளி இல்லை.சில நாட்களில் சில்லென்ற காற்று இல்லை. அந்த அழகான வெண்ணிறப் பறவையோ பின் எந்த நாளும் குளத்தின் மீது பறக்கவே இல்லை.அவன் அந்தக் கச்சிதமான கணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அந்தக் குறைபாடுகள் பிரதானமாகத் தெரிய அவனால் பின் வந்த நாட்களின் இரவுகளை ரசிக்க முடியவில்லை.
ஒரு நாள் அந்தக் குளத்தில் சில சிறுவர்கள் நீந்தி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.இன்னொரு நாள் சில அழகான மலர்கள் நீர்பரப்பில் மிதந்து கொண்டு இருந்தன.இன்னொரு நாள் ஒரு சிறு சத்தம் கூட இல்லாமல் அபூர்வமான மௌனத்தில் அந்தப் பகுதியே இருந்தது.இப்படி எத்தனையோ வித்தியாசமான,கூடுதல் அம்சங்கள் ரசிக்க இருந்தாலும் அவனால் ரசிக்க முடியவில்லை. காரணம் அவனை மெய்மறக்க வைத்த அந்த ஒரு இரவுடன் அவன் ஒவ்வொரு இரவையும் ஒப்பிட ஆரம்பித்தது தான்.
எந்த ஒரு கணமும் அப்படியே திரும்ப நிகழப்போவதில்லை.அது இயற்கையின் நியதி. அப்படி நிகழும் என்று எதிர்பார்க்கும் போது, ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பிக்கும் போது மற்ற கணங்களின் தனியழகை,தனிப் பயன்பாட்டைக் காண முடியாமல் போகிறது.ஒவ்வொரு கணத்தையும் ரசியுங்கள். ஆனால் அதே போல திரும்ப வரமுடியாது என்பதை மறந்து விடாதீர்கள். அப்படி வந்து கொண்டிருக்குமானால் அதுவே நமக்கு சலித்து விடாதா?
அதே போலத் தான் மனிதர்களும். ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். உலகம் இயங்க அனைத்து வித மனிதர்களும் அவசியமானவர்கள்.அதனால் ஒருவரைப் போல இன்னொருவர் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்.ஒவ்வொருவரையும் அவர்கள் இயல்பின் படியே ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ ஒன்று கற்றுக் கொள்ள இருக்கிறது.

Comments